Header
 

Le contenu de cette page nécessite une version plus récente d’Adobe Flash Player.

Obtenir le lecteur Adobe Flash

 

 

அல்குர்ஆன்
 

அகில உலகத்தையும் அறவழியில் செலுத்துவதற்காக அழகு மொழியாம் அரபியிலே இலக்கண நயத்துடன், இலக்கிய வளத்துடன், ஆழிய கருத்துக்களுடன் கூடிய அழகிய நடையிலே அனைத்தையும் பொதிந்த பெட்டகமாக அண்ணல் நபிகளார் மீது அல்லாஹ்வால் அருளப்பட்ட அருள்மறைதான் "அல் குர்ஆன்"

அவ்வருள் வேதம் ஏந்தல் நபிகளார் இவ்வுலகில் வாழ்ந்த காலையில்,ஏற்படக்கூடிய நிகழ்வுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு சிறிது, சிறிதாகவே இறக்கப்பட்டது.அவற்றை பதிவு செய்வதற்கென எழுதப்படிக்கத்தெரிந்த சில ஸஹாபாக்களை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் அருமை நபிகளார். (ஃகலீஃபாக்கள் நால்வரும், ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்கள், மஆத் இப்னு ஜபல், ஜைதிப்னு ஃதாபித் அவர்கள், காலி;த் இப்னு வலீத் அவர்கள் போன்றோர் அவர்களில் குறிப்பானவர்கள்) ஒவ்வொரு வசனமும் இறங்கும் சமயம் நபிகளார் குறிப்பிட்ட இந்த ஸஹாபிகளை அழைத்து ஓதிக்காண்பிப்பார்கள்.அதனை அப்படியே கவனித்து அந்த ஸஹாபிகள் கற்களிலும்,தோல்களிலும், மரப்பட்டைகளிலும் பதிவு செய்து கொள்வார்கள்.ஆனால் அவைகள் தொகுக்கப்படாமல் துண்டு, துண்டாகவே இருந்து வந்தது. ஏனெனில் நபிகளார் அந்த மக்களோடு ஆகியிருந்த காரணத்தால் அவைகளை தொகுத்து வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் அப்பொழுது அவர்களுக்கு ஏற்படவுமில்லை.

اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا

என்று இஸ்லாத்தை பூரணப்படுத்தும் இனிய வசனத்தை இறக்கிய பின்னரும், ஹழ்ரத் ஜிப்ரயீல் அவர்களின் பணியை இறைவன் முடித்திடவில்லை. ஏனெனில்
ان علينا جمعه وقرآنه 'நிச்சயமாக குர்ஆனை ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படி செய்வதும் நம்மீதே உள்ளன" என்று இறைவனே பொறுப்பேற்றுள்ளான் அல்லவா! அதன்படி இறக்கப்பட்ட வேதத்தை முறைபடுத்திக் கொடுக்கும் பொறுப்பையும் ஜிப்ரயீல் அவர்களிடமே இறைவன் ஒப்படைத்தான்.காரணம் பதிவுசெய்யப்பட்ட வசனங்கள் இறக்கப்பட்ட முறைப்படி அல்லாது பிரிந்து, பிரிந்தே இருந்தது.இன்ன வசனத்தை இந்த இடத்தில் வைக்ககும்படி இறைவன் ஏவியுள்ளான் என ஜிப்ரயீல் அவர்கள் ஏவுவார்கள். உதாரணமாக சூரா பகராவில் 281 ஆயத்தான

واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون
என்ற வசனத்தை நபியே! நீங்கள் சூரா பகராவிலே வட்டியை பற்றிய வசனத்திற்கும், கடனை பற்றிய வசனத்திற்கும் இடையிலே வைத்துவிடுங்கள் என்ற ஜிப்ரயீல் அவர்களின் ஏவலின் படியே அமைக்கப்பட்டது. (இவ்விஷயம் நபிகளாரின் மரணத்திற்கு 9 நாட்களுக்கு முன் நடந்தது) இந்த ஏவல்களை நபி அவர்கள், வஹியை எழுதக்கூடிய ஸஹாபாக்களுக்கு எடுத்துக்கூற, அதனை அப்படியே அவர்கள் செய்வார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வருடமும் அதுவரை இறக்கப்பட்ட வசனங்களை அண்ணல் நபிகளார் ஜிப்ரயீல் அவர்களிடம் ஓதிக்காண்பிப்பார்கள். ஆனால் நபியவர்கள் மரணித்த அவ்வருடத்தில் மட்டும் இருமுறை ஜிப்ரயீல் அவர்களிடம் ஓதிக் காண்பிக்கச்செய்து, இறைத்தூதரின் இதயத்திலே அவர்களின் மனனத்தைக் கொண்டு மாமறையை பாதுகாத்தான் படைத்தவன் அல்லாஹ்.

மன்னர் நபிகளாரின் மறைவுக்குப் பின்னால் ஹழ்ரத் அபூபக்கர் அவர்களின் ஆட்சி காலத்தில் 'யமாமா"என்ற ஓர் போர் நிகழ்கின்றது. இப்போரில் தான் இறைமறையை இதயத்தில் தாங்கிய 70 ஹாஃபிழ்கள் ஷஹீதாக்கப்படுகிறார்கள். இவ்விஷயம் முஸ்லிம் அனைவரையுமே திடுக்கத்தில் ஆழ்த்தியது. இந்த ஹஃபிழ்களின் மரணத்தோடு குர்ஆனும் இவ்வுலகை விட்டும் சென்றிடுமோ என்ற அச்சம் உமர் அவர்களின் உள்ளத்திலே ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. இதற்கு தீர்வு காணவேண்டுமே என்ற உயர்வான எண்ணம் அவர்களின் கால்களை ஃகலீஃபா அபூபக்கர் அவர்களின் சமூகம் அழைத்துச்சென்றது. ஃகலீஃபா அவர்களிடம் உமர் அவர்கள் தன் ஏக்கத்தை எடுத்துறைத்து எழில் மறையை ஒன்று திரட்டுவதே அதற்கு தீர்வு என்றார்கள். ஃகலீஃபா அவர்களோ எடுத்து வைத்த கருத்து ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்த போதிலும்
كيف افعل امرا لم يفعله رسول الله صلى
الله عليه وسلم ولم يعهد الينا فيه عهدا

'நபிகளார் செய்யாத, செய்யும்படி நம்மிடத்தில் உடன்படிக்கை எடுக்காத ஓர்செயலை நான் எவ்விதம் செய்வேன்" என்று கூறி, மறுத்துவிடுகிறார்கள். ஆனால் இக்கருத்து ஏற்கத்தக்கதே என்ற எண்ணத்தை அல்லாஹ், அபூபக்கர் அவர்களின் இதயத்தில் ஏற்படுத்தும் வரை இவ்விஷயத்தை உமர் அவர்கள் திரும்பத்திரும்ப எடுத்துரைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

இதனை ஏற்றுக்கொண்ட அபூபக்கர் அவர்கள் தொகுக்கும் பொறுப்பை ஹழ்ரத் ஜைதிப்னு ஃதாபித் அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். (இவர்கள் யாரெனில் நபிகளார் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ளும் முன்பே 16 சூராக்களை மனனம் செய்த 11 வயது சிறுவராக இருந்தவர்கள். தபூக் போரில் பனூ நஜ்ஜார்களின் கொடியை சுமந்திருந்த அம்மாரத்திப்னு ஹஜ்மு என்ற ஸஹாபியிடமிருந்து அக்கொடியை நபியவர்கள் வாங்கி ஜைத் அவர்களிடம் கொடுத்து
القرآن مقدم وزيد اكثر اخدا للقرآن منك 'குர்ஆன் முற்படுத்தத் தக்கது. உம்மைவிட குர்ஆனில் அதிக ஞானம் பெற்றவர் ஜைத் என்றார்கள் அதுமட்டுமின்றி நபிகளார், அரசர்களுக்கு மத்தியில் கடிதப் போக்குவரத்து ஏற்படுத்த இவர்களை சுர்யானிப் பாஷையை கற்கச்சொன்னார்கள் அதன்படி 17 நாட்களில் கற்றுத்தேர்ந்தார்கள்) இத்தகைய சிறப்பு மிக்கவர்களைதான் அபூபக்கர் அவர்கள் குர்ஆனை ஒன்று திரட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஆனால் அவர்களோ ஒரு மலையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பெயர்த்;து கொண்டு வருவது என்றால் கூட செய்து விடுவேன். ஆனால் அதைவிட கஷ்டமான, நபிகளார் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படி செய்யச் சொல்கிறீர்கள் என்று கூறி மறுத்துவிடுகிறார்கள். ஆனால்; இவ்விஷயம் சரியானதே என்ற எண்ணத்தை ஜைத் அவர்களின் உள்ளத்திலே இறைவன் ஏற்படுத்தும் வரை அபூபக்கர் அவர்கள் திரும்பத், திரும்ப வலியுறுத்தினார்கள்.பின்பு ஜைத் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூமூஸல் அஷ்அரி அவர்கள் ஆகிய முக்கிய ஸஹாபிகளோடு இணைந்து, பிரிந்து கிடந்த பதிவுகளையெல்லாம் நபியவர்கள் எப்படி முறைப்படுத்தம்படி கட்டளையிட்டு இருந்தார்களோ அதன்படி ஒன்று சேர்த்தார்கள்.

ஹழ்ரத் ஜைத் அவர்கள் அறிவிக்கிறார்கள்
كنا عند النبي صلى الله عليه وسلم نؤلف القرآن من الرقاع
'நபிகளாரின் சுட்டிகாட்டுதலின் படியே வசனங்களையும் அத்தியாயங்களையும் நாங்கள் கோர்வை செய்பவர்களாக ஆகியிருந்தோம் என குறிப்பிடும் அவர்கள் குர்ஆனை தொகுத்து முடித்துபின் அதனை ஸெய்யிதுனா அபூபக்கர் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அத்தொகுப்பு அவர்களின் மரணம் வரை அவர்களிடமே இருந்து வந்தது. இவர்களின் மரணத்திற்கு பின் இரண்டாம் ஃகலீஃபா உமர் அவர்களிடமும் அவர்களின் மரணத்தின் அன்னாரின் மகளான அருமை நபிகளாரின் துணைவியுமான அன்னை ஹஃபஸா நாயகியிடம் பாதுகாப்பாக இருந்து வந்தது.

ஹழ்ரத் உதுமான் அவர்களின் ஆட்சிகாலம். இஸ்லாமிய ஆட்சி நாலா திசைகளிலும் எட்டிபிடித்தது. குர்ஆனை அழகிய தொனியில் ஓதக்கூடிய காரிகள் பல நாடுகளிலும் பரந்து விரிந்து பல முறைப்படியும் ஓத ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் அண்ணலாரின் அந்தரங்க காரியதரிசியான ஹழ்ரத் ஹூதைஃபதுப்புனுல் யமான் அவர்கள், ஆர்மீனியா, ஆஜர்பேஜான் போன்ற நாடுகளை வெற்றி கொள்வதற்காக ஷாம் வாசிகளுடன் நடந்த போரில் கலந்து கொள்கிறார்கள். அங்கே இறைமறையை ஓதுவதில் மக்களிடம் காணப்பட்ட வேறுபாடுகள் இவர்களை திடுக்கத்தில் ஆழ்த்தியது. நாடு திரும்பியதும் ஃகலீஃபா உதுமான் அவர்களிடம் சென்று, 'யஹூதி, நஸாராக்களின் வேறுபாடுகளைப் போன்று மக்கள் வேறுபடுமுன் சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார்கள" - புஹாரி

இதனை செவியுற்ற உத்மான் அவர்கள், உடனடியாக அன்னை ஹஃப்ஸா நாயகியிடம் இருந்த குர்ஆனின் தொகுப்பை வாங்கிவரச் செய்தார்கள். அதனை மீண்டும் தொகுத்துத் தந்த ஜைத் இப்னு ஃதாபித் அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர், ஸயீத் இப்னு ஆஸ் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாரித் ஆகியோரிடம் கொடுத்து பல பிரதிகள் எடுத்து தரும்படி வேண்டினார்கள். அதன்படியே 7  பிரதிகள் எடுக்கப்பட்டு, ஃகலீஃபா அவர்களின் கையில் கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட உத்மான் அவர்கள் மதீனாவுக்கென தன்னிடத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு உடனடியாக, மக்கா, ஷாம், யமன், பஹ்ரைன், பஸரா, கூஃபா ஆகிய நாடுகளுக்கு ஒவ்வொரு பிரதிகளை அனுப்பி மாபெரும் குழப்பத்தை தவிர்க்கும் மகத்தான வேலையை செய்தார்கள். அவ்வான்றோர்களின் அளப்பரிய சேவையில் தான் இன்றும், இனி என்றும் ஒரு புள்ளியும் பிசகாது, புனிதம் குறையாது கவின்மறை குர்ஆன் நம் கைகளில் தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அம்மாமனிதர்களை நம் மனதில் மதித்து போற்றி, மாமறையை பின்பற்றி, மாநபியின் வழிநின்று ஈருலகிலும் வெற்றி பெருவோமாக!

ஆமீன்.

 

  Haut de page