|
செயலின் சிகரம்
ஏ.கே.
ரிபாயி
தற்காலத்துப் பள்ளிப் பிள்ளைகளை ஒரு தட்டிலும் அவர்கள் சுமந்து
செல்லும் புத்தகங்களை மற்றொரு தட்டிலும்
வைத்தால்,
புத்தகங்கள் உள்ள தட்டுத்தான் அதிக எடையிருக்கும்
என்று இலக்கிய விமர்சகர் ஒருவர் சொன்னதாக ஞாபகம். ஹமீதாவின் மேஜைமீது
பரந்து கிடந்த புத்தகக் குவியல் இதை ஊர்ஜிதம்
செய்வது போல இருந்தது.
ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டி
அதில் தன் இடது கை விரல்களை அடையாளமாக வைத்த வண்ணம் வலது கையால்
பிறிதொரு நூலைத் துழாவிக்கொண்டிருந்தாள் அவள்.
பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளை கூட அவ்வளவு
அக்கறையாகப் படிக்காது. இரவு மணி பதினொன்று அடித்துவிட்டதையும் அறியாத
அளவுக்கு ஹமீதா அப்படி மூழ்கிப் போய் இருந்தாள்.
ஜன்னல் வழியாக காற்று இலோசாகத் தவழ்ந்து வந்தபோதிலும்,
ஹமீதாவின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி
நின்றன. பரந்த, எடுப்பான அவள் நெற்றியில் கேசச்
சுருள்கள் சுருண்டு கிடந்து தனியொரு அழகைக் கொடுத்தது.
அறையில் இன்னும் விளக்கு எரிவதைக் கண்ட பல்கீஸ்
பீவி, தன் மகளை உடனடியாகப் படுக்கப் போகும் படி
செல்லமாகக் கண்டித்து விட்டுச் சென்றாள்.
அதையும் சரியாகக் காது கொடுத்துக் கேட்டாளில்லை
அவ்விள நங்கை.
அப்போது அப்பக்கமாக வந்த அப்துல்கபூருக்கு புத்தகமும் கையுமாகக் காட்சி
அளித்த ஹமீதாவைப் பார்த்ததும் சும்மா இருக்க முடியவில்லை. தன்னுள்
ஏளனமாகச் சிரித்துக்கொண்டு அவளருகில்
நெருங்கினான். பேச்சைக் கொடுத்து வம்புக்கிழுக்க வருவதைச் சுட்டிக்
காட்டியது அவனது முகபாவம்.
« முதல்
பரிசையே வாங்கிடப் போறாப்போலதான்
நினைப்பாக்கும். போட்டிக்கு தயாரிப்பு
மும்முரமாக இருக்கே... ஏன் விழுந்து விழுந்து ஓயாமே படித்து உடம்பைக்
கெடுத்துக்கறே... போட்டி உன்னை பாட்டியாக்கிடும் போலிருக்கிறது. உங்க
ஸ்கூல்லே எத்தனையோ கெட்டிக் காரங்க
இருப்பாங்க... அவங்க முன்னாலே நீ எங்கங்கே
நிற்கப்போறே? »
இம்மாதிரி அவன் உற்சாக மூட்டினான். தன் தங்கையை!
இதையும் அவள் சட்டை செய்யவில்லை. படிப்பில் கவனம் செலுத்தப்
பிரயத்தனப்பட்டாள். இருந்தாலும் அவள் வாய் சும்மா இருக்கவில்லை.
அண்ணனுக்கு இளைத்தவளா தங்கை?
« இந்தப் பேச்சுப் போட்டியில்
நான் பரிசு வாங்குகிறேனா இல்லையா பார். போன
வருஷமே இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். அப்போது முதல் பரிசு
வாங்கியவள் படிப்பைப் பூர்த்தி செய்துவிட்டுப் போய்விட்டாள். இப்போ
எனக்குத்தான் …சான்ஸ்...
அதுவும் இந்த வருஷம் எஸ்.எஸ். எல்.ஸி.யை முடித்துக்
கொண்டு ஸ்கூலை விட்டு வெளியே போக இருப்பவள் நான். இதுவே எனக்கு கடைசி
மீலாதுப் போட்டி இதில் வெற்றி மாலை சூடாவிட்டால்
நாள் பூராவும் மாணவி மன்ற நடவடிக்கைகளில் நான் பங்கெடுத்துக்
கொண்டதுதான் என்ன பயன்?... உன்னைப் போல
நினைச்சயோ... நீயும் காலேஜிலே படிக்கிறேன்னு
பேசறயே... ஏதாவது ஒரு விழாவிலே கலந்து ஒரு இரும்பு மெடலாவது வாங்கி
வந்திருக்கியா? »
புத்தகங்களை மூடிவைத்துவிட்டு அப்துல் கபூர் பக்கமாகத் திரும்பி
இருந்து கொண்டு ஹமீதா சுடச்சுடப் பதில் கொடுத்தாள்.
« தங்கமெடல் என்றதும் உனக்குத்
தெம்பு வந்து விட்டதாக்கும் »
« மெடல் மட்டுமா...?
அத்தோட ரூபாய் நூறு ரொக்கப் பரிசும்
வழங்கப் போறாங்க... யாரோ ஒரு …கான்
பகதூரின் மனைவி பரிசுச்
செலவுகளை ஏற்றுக் கொள்கிறது என்று தலைமை ஆசிரியை
சொன்னாங்க ».
ஒரு நிமிஷம் நிறுத்தினாள்
ஹமீதா. சட்டென்று ஏதோ ஞாபகம் வரவே தமையனை நோக்கி
« ……உன் காலேஜில்
இருந்து …ப்ராபெட் முஹம்மத் புத்தகம் இருந்தால்
எடுத்துவரச் சொன்னேனே. நீ எப்போ கொண்டு வரப் போறே?
அடுத்தவாரம் மீலாது... அதுக்கு உபயோகப்படுத்தும்படியாக
எடுத்துவா » என்று உரிமையுடன்
சொன்னாள்.
« இருக்கிற புத்தகங்களையே மேஜை
தாங்காது போலிருக்கிறது. அதிலே இதுவேற வேணுமாக்கும் சரி... சரி
பார்க்கலாம் » என்றான்
கபூர்.
முஸ்லிம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில்
வாசிக்கும் மாணவி ஹமீதாவுக்குப் பதினாறு வயதே நிரம்பி இருக்கும்.
எப்பொழுதும் வகுப்பில் முதலாவதா அவள் விளங்கி வந்தாள். ஒல்லியான உடல்,
அதற்கேற்ற உயரம், பிறரைக்
கவரும் பார்வை. அதில் பெண்மையின் குழைவு நிறைந்தது.
அறிவையும் அழகையும் கொடுத்திருந்ததுடன் ஆண்டவன்
அவளுக்கு ஐஸ்வரியத்தையும் அளித்திருந்தான்.
இத்தனை பாக்கியங்களும் இருக்கும் பொழுது கேட்கவா வேண்டும்?
பள்ளியில் அவளுக்கு அறிமுகமில்லாதவர்களே கிடையாது
எனலாம். யாருடனும் சுமூகமாகப் பழகுவாள். நறுக்குத் தெறித்தாற்போல நாலு
வார்த்தையைக் கச்சிதமாகப் பேசி முடிப்பாள்.
வழக்கமாகப் பணம் படைத்தவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் அகம்பாவம்
அவளிடம் அறவே கிடையாது. இச்சுபாவமே மாணவிகளிடம் அவளை பிரபல்யமடைய
வைத்தது. அவளது எடுப்பான உடலும், கணீரென்ற
குரலும் கேட்போரின் கவனத்தை அவள் பக்கம்
இழுத்து விட்டதில் வியப்பொன்றும் இல்லைதான்.
மீலாது தினத்தன்று நடைபெறும் போட்டியில் பரிசு
தட்டிக் கொண்டு போவதென்பது பள்ளி மாணவிகளுடைய பிரதான லட்சியங்களுள்
ஒன்று. எல்லா மாணவிகளும் இதில் ஒரு கண் வைத்திருந்தார்கள்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தம் செய்து கொண் டிருந்தவர்களுள்
ரஹ்மத்துனிஸா ஒருத்தி,
அவளும் பத்தாவது வகுப்புதான். சுமாராகப் பேசக்கூடியவள். யாருக்குத்தான்
ஆசை விட்டது? அடுத்தபடியாக உள்ளவள் ஐந்தாவது
பாரம் வாசிக்கும் சுபைதா. மாணவியர் மன்ற விவாதங்களில் அடிக்கடி
பங்கெடுத்து வந்திருந்தாள்.
முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் பிரசங்கிதான். கருத்துச் செறிவும் சொல்
நயமும் அவளிடம் உண்டு. பரிசு பெற தகுதி
பெற்றவர்களுள் ஒருத்தி என்பது ஹமீதாவுக்கே தெரியும்.
மற்றும் மெஹ்ருன்னிஸா, ஆயிஷா
பாத்திமா, இப்படிப் பேச்சாளர்
பட்டியல் வளர்ந்து கொண்டேபோகும்.
பேசுவதென்றால் பெண்களா முன்வர மாட்டார்கள்.
ரஹ்மத் என்னென்ன …பாயிண்ட் கள்
பேசப் போகிறாள் என்பதை அறிய ஹமீதாவும்,
ஆயிஷா சேகரித்திருக்கும்
…விஷயத்தை அறிய சுபைதாவும் முயற்சித்தார்கள்.
இதை பற்றித் துப்பு வெட்டுவதிலேயே பள்ளியில் பெரும் பொழுதுபோனது.
இதற்கிடையில் மாணவிகளைக் காணும்போதெல்லாம் தலைமை ஆசிரியை
« ……என்ன தயார் பண்ணிட்டீங்களா?
நமது ராஜிய மந்திரி
திருமதி ராஜம் சாமுவல் அன்று தலைமை வகிக்கிறார்.
பேச்சுக்களெல்லாம் பிரமாதமாக இருக்க வேண்டும். பெரிய
இடத்துப் பெண்கள் அனைவரும் வருவார்கள். நன்மதிப்பை நீங்கள் பெறுவதுடன்
பள்ளிக் கூடத்திற்கும் நல்ல பெயர் வாங்குறாப்
போல இருக்க வேண்டும் » என்று
உற்சாகமூட்டியவண்ணம் இருந்தாள்.
நாளை மீலாது தினம். தன்னைப்
பொறுத்தமட்டில் ஹமீதா தயார்.
இன்றே வேண்டுமானால் கூடப் பேசி விடத் தயார்தான். மணி
மணியாக கருத்துக்களைச் சேகரித்து வைத்திருக்கிறாள்.
வாய் திறந்தால் மடை திறந்தது போல இருக்கும். பூவையொத்த அவள் நாவில்
புதுப் புனலின் வேகம் இருந்தது. கேட்போர் மெய்மறந்து இதயத்தைப்
பறிகொடுக்காமல் தீராது. சரி, ஒரு நாள்தானே.
நாளை பார்த்துக் கொள்ளலாம்.
வகுப்பிற்குப் போய்க் கொண்டிருந்தாள் ஹமீதா. அகஸ்மாத்தாக அவள் கவனம்
பந்தாடும் மைதானத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரு பெண்களின் மீது
விழுந்தது. நன்றாகக் கூர்ந்து பார்த்தாள்.
சுபைதாவும் அவள் சினேகிதி ஒருத்தியுமாக தனியாக உட்கார்ந்து
கொண்டிருந்தார்கள். புத்தகமொன்று அவர்கள் முன்னிலையில் கிடந்தது.
ஹமீதாவுக்கு ஒரு நப்பாசை ……அது என்ன அவ்வளவு
அந்தரங்கமாகப் படிக்க வேண்டிய விஷயம். என்னவென்று தான் பார்ப்போமே
என்று எண்ணியவளாய் அவ்விரு பெண்களும் அறியா வண்ணம் பின்புறமாக அவர்கள்
பக்கம் சென்றாள். பக்கத்தில் நெருங்கியபோது
அவ்விருவரும் படித்துக் கொண்டிருக்கவில்லை என்பதும் தங்களுக்குள்
பேசிக் கொண் டிருக்கிறார்களென்பதும்
புலனாகியது.
முக்கிய விஷயம் பேசுவதை அம்முகங்கள் காட்டின. பின்னால் நின்ற
ஹமீதாவுக்கு அவர்களின் உரையாடல் காதில் விழுந்தது. ஒரு நிமிஷம் கூட
நின்று கேட்டிருக் கமாட்டாள்.
குறுகுறுப்பான உள்ளத்துடன் விளையாட்டுப்பண்ண வேண்டும் என்ற ஆசையுடன்
அங்கு வந்த ஹமீதாவின் முகத்தில் சட்டென்று ஒரு மாறுதல் தென்பட்டது.
தீயை மிதித்தது போன்ற உணர்ச்சியுடன் பின்னால் இரண்டடி தள்ளி
வந்துவிட்டாள். அவள் உடல் சில்லிட்டுப் புல்லரித்தது.
ஏன் இங்கு வந்தோம் என்றாகிவிட்டது அவளுக்கு.
உரையாடலைக் கேட்டது அவளுக்கு மன உளைச்சல் ஊட்டியது.
வந்தவழியே திரும்பி அங்கிருந்து நகர்ந்தாள் ஹமீதா. சுபைதாவோ அல்லது
மற்றவளோ ஹமீதா வந்து போனதைக் கவனிக்கவில்லை.
இமைப்பொழுதில் இதயத்திலிருந்த குதூகலம் மறைந்து விட்டதே.
வகுப்பில் பொழுதைக் கழிப்பது ஹமீதாவுக்குக் கஷ்டமாக இருந்தது.
சீக்கிரமே வீடு திரும்பிவிட்டாள். அன்றிரவு ஒன்பது மணிக்கெல்லாம்
படுத்தும் விட்டாள். …பத்து நாளைக்கு
முன்னாலேயே தன்னைச் சித்தப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தவள். நாளைக்கு
போட்டியிருக்கும் போது கதவைப் பூட்டிக்கொண்டு படுத்து விட்டாளே என்று
அப்துல்கபூருக்கு ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் பிற்பகல் பல்கீஸ் பீவி மூன்று மணிக்கே தயாராகி விட்டாள். மகள்
பேச்சைக் கேட்பதில் தாய்க்கும் பெருமை இருக்காதா என்ன?
ஹமீதாவையும் துரிதப்படுத்திப்
புறப்படச் செய்தாள். மாலை ஐந்து மணிக்கு விழா துவக்கம் எல்லா
மாணவிகளும் தங்கள் உற்றார் உறவினர்களை அழைத்து
வந்திருந்தார்கள். மந்திரியும் குறித்த
நேரத்தில் வந்துவிட்டார்.
« இவர்கள் முன்பேசி என் மகள்
ஜெயிக்கப் போகிறாள். என் கண்ணால் இதைக்
காணப்போகிறேன் » இவ்விதம் சிந்தனையை ஓட
விட்டபோது பல்கீஸ் பீவிக்கு மெய்சிலிர்த்தது. ஆனால் பல்கீஸ் பீவிக்கு
இருந்த குஷி அன்று ஹமீதாவுக்கு இல்லை.
பள்ளிக்கூடமே திருவிழாக் காட்சியாகத்தான் இருக்கிறது. ஏற்பாடுகள்
பிரமாதம். பேச்சுப்போட்டி ஆரம்பமாயிற்று.
ஒவ்வொரு பிரசங்கிக்கும் ஐந்து நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன. பேச்சாளர்
பட்டியலில் ஹமீதாவின் பெயர் கடைசியில் இருந்தது அவளுக்கு நல்லதாகப்
போய்விட்டது. ஒவ்வொருவராக வந்து பேச ஆரம்பித்தனர். ஓரிருவரைத்
தவிர மற்றவர்கள் நன்றாகத்தான் பேசினர்.
சுபைதாவின் முறை வந்தது. குறித்த காலத்தில் அழுத்தமாக,
கச்சிதமாகப் பேசிமுடித்தாள் அவள். அப்பொழுது சபை
கலகலப்பாக இருந்தது. கைதட்டல்களும் இருந்தன.
இறுதியாக எழுந்து மேடைக்குப் போனாள் ஹமீதா. வழக்கமான கரகோஷம் அவளை
வரவேற்றது. சாந்தமான முறையில் சொற்பொழிவை ஆரம்பித்தாள். ஒரு
நிமிஷத்தில் பேச்சு சூடு பிடித் தது. பேச்சில்
வேகம் புகுந்தது. விஷயத்தின் தரமும் வார்த்தை அழகும் அவள் வாயில்
விளையாடின. அதற்குப் பக்கபலமாக அவளது முகபாவமும் அங்க அசைவுகளும்
இருந்தன. சபை அப்படியே கட்டுண்டு போய்விட்டது.
பேச்சை முடிக்கும் கட்டம் நெருங்கியது. அதற்கு அறிகுறியாக ஒரு நிமிஷமே
இருக்கிறது என்பதைக் குறிக்கும் மேஜைமணி
ஒலித்தது. அத்துடன் பேச்சை முடித்து
விட்டு ஹமீதா இறங்கியிருக்கலாம் முடிவும் பொருத்தமாக இருந்திருக்கும்.
உணர்ச்சி வசப்பட்டு கடந்த நான்கு நிமிஷங்களும் பேசியவள் சட்டென்று
எதையோ நினைத்தவளாய் மேலும் பேச்சைத் தொடர்ந்தாள். நேரம்
தீர்ந்துவிட்டது என்பதை அறிவிக்கும் மணி அடிக்கப்பட்டது. அப்பொழுதாவது
ஹமீதா மேடையை விட்டு இறங்கியிருக்க வேண்டும்.
அப்படியும் செய்யவில்லை. மேலும் பேச்சை தொடர்ந்தாள். மணி யோசை
தொடர்ந்து அலறியது. …இனி பேசக்கூடாது இறங்கு என
ஆணையிடுவது போலிருந்தது அது. அப்போது தான் மேடையைவிட்டுப்
பதற்றமில்லாமலும் நிதானமாகவும் ஹமீதா இறங்கினாள். தன் இருப்பிடத்தை
நோக்கி நகர்ந்த அவள் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருந்தது.
இரண்டாவது மணி அடித்ததும் அவள் பேச்சை முடிக்கவில்லை என்பதைக் கண்டு
உண்மையில் அதிகமாக வருத்தப்பட்டவர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருந்த
பிரமுகர்கள்தாம். அச்சமயம் அவர்கள் வருத்தத்தோடு சப்புக்கொட்டியது
பக்கத்திலிருந்தவர்களுக்கு நன்றாக கேட்டது.
நீதிபதிகள் அப்படிச் செய்திருக்கக் கூடாதுதான்.
என்றாலும்,
முதல் பரிசு வாங்கவேண்டியவள்,
அசிரத்தை காரணமாக கால ஒழுங்கைக் கடைப் பிடிக்கவில்லையே
என்று எண்ணியதும் தங்களை அறியாமலேயே அவர்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி
விட்டது போலும்.
போட்டி முடிவு அறிவிக்கும் சமயம் நெருங்கியது. கூட்டத்திலிருந்தவர்கள்
ஆவலுடன் எதிர்நோக்கி நின்றார்கள்.
எங்கும் ஒரே பதற்றம் ஹமீதா மட்டும எவ்விதப் படபடப்பும் காட்டவில்லை.
அவள்தான் எப்பொழுதோ முடிவு செய்துவிட்டாளே.
சுபைதாவுக்கு முதல் பரிசு.
முதல் பரிசு பெறவேண்டிய ஹமீதாவுக்கு …ஆறுதல்
பரிசாக சில நூல்கள்
வழங்கப்பட்டன.
முடிவைக்குறித்து உண்மையில் வருத்தப்படாதவள் ஹமீதா ஒருத்திதான். ஆனால்
கூட்டத்தில் வந்தவர்கள் அனைவரும் வாய்விட்டு அங்கலாய்த்து விட்டார்கள்.
« என்ன அழகாகப் பேசிற்று அந்தப்
பொண்ணு » என்று ஹமீதாவைப் பற்றிக் கைசேதப்
பட்டார்கள். ஹமீதாவுக்குத் தான் நீதிபதிகள் பெருவாரியாக
…மார்க்குகள் வழங்கினார்கள் என்பதையும்,
ஆனால் கால ஒழுங்கை அனுசரிக்க வில்லை என்ற ஒரே
காரணத்திற்காக அவளுக்கு முதல் பரிசு வழங்குவது
தடைபட்டது என்பதையும் அறிந்த பொழுது கூட்டத்தினருக்கு ஆத்திரம் தான்
வந்தது.
பல்கீஸ் பீவிக்கு அத்துடன் அழுகையும் வந்தது. « பேசச்
சொன்னா நல்லா பேசிவிடணும். ஒரு நிமிஷம் நாலு நிமிஷமுண்ணு பேசு என்றால்...
இதென்ன பேச்சோ... » என்று போட்டி விதிமுறைகளைக்
கடுமையாகக் கண்டித்தாள் அந்த அம்மாள்.
தலைமை ஆசிரியை ஹமீதாவைக் கண்டதும் தன் தலையில்
அடித்துக் கொண்டதுதான் பாக்கி. « நீ என்ன
இப்படிப் பண்ணிட்டே? உனக்குத்தான் போட்டி
விதிகள் தெரியுமே... சேச்சே... கடைசியில்
கோட்டை விட்டுட்டியே... » என்று
வருத்தப்பட்டாள்.
இந்த அனுபவங்கள் ஹமீதாவைப்
பாதிக்கவில்லை. அவள் முகம் மலர்ந்தே இருந்தது. எல்லோரும் தனக்காக
வருத்தப்பட்டது தான் அவளுக்கு வேதனையைக் கொடுத்தது.
போட்டி முடிவைக் கேட்டு அப்துல் கபூர் அலறியேவிட்டான். தன்னைத் தேடி
வந்த முதல் பரிசை தன் தங்கை நழுவ
விட்டுவிட்டாள் என்றதும் அவன் மனம் பொறுக்கவில்லை. முன்பு அவளை
நையாண்டி செய்தவன் முடிவை அறிந்ததும் நலிவுற்றான்.
வீட்டிற்கு வந்ததும் ஹமீதாவிடம் கோபக்கனல் தெறிக்கப் பேசினான்.
அழாக்குறையாகக் கேட்டான்.
முதலில் சிறிது தட்டிக் கழித்தவள் பின் சொன்னாள்.
« நான் வேண்டுமென்றுதான்
அப்படிச் செய்தேன். பரிசுபெற வேண்டுமென்பது
இன்று என் நோக்கமல்ல... »
« அப்போ ஏன் விழுந்து விழுந்து
படிச்சே? பேசாமல் இருக்க வேண்டியது தானே,
என்னைத் தொந்தரவுபண்ணி நானும் புத்தகங்களெல்லாம் கொண்டு வந்தேனே... »
« நேற்றுவரை அப்படித்தான்.
ஆனால் பின்னால் மாற்றிக் கொண்டேன். »
« ஏன்? »
ஹமீதா சிறிது தயங்கினாள். ஒரு கணம் அமைதி நிலவியது. அப்துல் கபூரிடம்
உண்மையைச் சொல்லாமல் தீராதென்றுபட்டது. காரணத்தை விளக்கினாள்.
« நேற்று பள்ளிக்கூடத்தில் சுபை
தாவும் அவள் தோழியும் பேசியதைக் கேட்டபின் என் மனது சரியில்லை.
இன்று எனக்கு முன் பேசிய சுபைதா நன்றாகப் பேசி
சபையினரின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதும்தான்
என் மனப்போராட்டம் நீங்கிற்று. »
« அது யார் சுபைதா?...
அவள் என்ன சொன்னாள். பின்னிப் பின்னிப் பேசிறியே... »
« அவள் ஐந்தாம் பாரம் படிக்கிறாள்.
நல்ல திறமைசாலி தான். ஆனால் மிகவும் ஏழைபோலிருக்கிறது. தன் தோழியிடம்
அவள் ‘இந்தப் போட்டியில் என்னால் ஜெயிக்க
முடிந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். ரொக்கமாக
வருகிற ரூ.100ஐயும் தங்கப் பதக்கத்தையும்
வைத்துக்கொண்டு எஸ்.எஸ்.எ ல்.ஸி.யையும் ஒரு மாதிரியாக
ஓட்டி விடுவேன்.... இந்த உதவியில்லாது போனால் படிப்புச்சரி...
எங்க அத்தாவுக்கு இதுக்குமேலே தாக்குப் பிடிக்க
முடியலே... என்ன செய்றது.
பத்தாவதுவரை முடித்தாலாவது ஏதாவதொரு வேலை செய்து பிழைக்க முடியும்...
முதல் பரிசு கிடைக்குமோ என்னமோ... அல்லாஹ்
இருக்கிறான்.... பார்க்கலாம் என்று மனமுருகிச்
சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் கண்களை நீர் மறைத்துக்
கொண்டிருக்க வேண்டும். தரையில் ஊன்றி இருந்த அவள் கையில் இரு சொட்டுக்
கண்ணீர் விழக்கண்டேன். அதைப் பார்த்ததும் என் மனம் தாள வில்லை.
இப்பரிசு
எனக்குக் கிடைக்கவில்லை என்றால் அதனால் குடி
முழுகிப்போவது ஒன்று மில்லை. ஆனால் ஒரு பெண்ணின் வாழ்வையே இது மலரச்
செய்யலாம் என்று எண்ணியவுடன் என் மனம் பந்தயத்தில் ஈடுபடாமல் வேறு
யாராவது பரிசைத் தட்டிக் கொண்டு
போய்விட்டால்...
நல்லவேளை. நான் இறுதியாகப் பேச நேர்ந்தது. சுபைதாவின் பேச்சைக்
கேட்டதும், நான் சரியாகப்
பேசாவிட்டால் அவளுக்குத்தான் முதல் பரிசு
என்பதை உணர்ந்தேன். அதனாலேயே நான் மேடையில் அப்படி அசம்பாவிதமாக நடந்து
கொண்டது. »
கோபத்தை ஆற்றும் மருந்தாக இருந்தன ஹமீதாவின் வார்த்தைகள். அப்துல்கபூரின்
உள்ளம் குழைந்து கொடுத்தது. தங்கையின் சொற்கள் அவன் மனதை வில்லாக
வளைத்தன. தங்கையின் தியாகத்தைக் கண்டு இப்பொழுது அவன் பெருமிதம் கொள்ள
ஆரம்பித்தான். வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிவரக் கஷ்டப்பட்டன.
ஒருவாறு சமாளித்துக் கொண்டு ஹமீதாவிடம் கூறினான்.
« ஹமீதா... நீ இன்று
பேசவில்லை... செயலில் செய்து காட்டிவிட்டாய்... நாயகத் திருமேனி
அவர்களை - ஒரு செயல் வீரரை- நினைவு கூறும் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய
ஒழுங்கிற்கு இலக்கணம் வகுத்துவிட்டாய். »
இலோசாக முறுவலித்தாள் அவள். அதிலே வெற்றியின் ரேகைகள் தெரிந்தன.
பின் அவள் ஆரம்பித்தாள்.
« நாயகமவர்கள்
கல்விக்கு அளித்த மகத்துவம் உனக்குத் தெரியாததா?
பத்ரு யுத்தத்தில் பிடித்த கைதிகளை விடுதலை செய்யும்
போது அவர்கள் கடைப்பிடித்த முறை உனக்கு நினைவு வருகிறதா?
பணத்திற்குப் பதிலாகக் கல்வியைப் புகட்டச் சொல்லிக்
கைதிகளுக்கு விடுதலை அளித்தார்கள் நாயகம். முஸ்லிம்களான
மதீனாவாசிகளுக்கு, எழுத்தறிவைக் கற்றுக்
கொடுத்த குறைஷிகளுக்கு உடனடியாக விமோசனம் கிடைத்தது. வேறு எந்த நாட்டு
யுத்தச் சரித்திரத்திலாவது நீ இப்படியொரு
சம்பவத்தைப் பார்த்திருக்கிறாயா?
கல்விக்கு அவர்கள் அளித்திருந்த மதிப்பில் ஒரு
அணுவளவாவது நாமும் செய்து காட்டவேண்டாமா? சரி,
உதவிதான் செய்ய முடியவில்லை. ஒரு ஏழைப் பெண்ணின் படிப்பிற்குக்
குறுக்கே நிற்காமலாவது இருக்கலாமல்லவா?... நீயே
சொல் அண்ணே* நான் செய்தது சரியா,
தவறா என்று... இம்மீலாது
பரிசு எனக்குக் கிடைத்திருந்தால் கூட இவ்வளவு
மகிழ்ச்சி ஏற்பட்டிருக்காதுபோலிருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்? »
அறிவுத் தோட்டத்துக்கு ஆக்கம் தந்த அண்ணல்
நபியவர்களின் புனிதமான போதனையைச் செயல்படுத்தும் முறையில் தியாகம்
செய்த தன் தங்கையைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்த அப்துல் கபூர்
வேறு என்ன மாதிரி நினைக்கப் போகிறான்?
‘பிறை’ 1957
அக்டோபர் இதழில் வெளியான சிறுகதை.
|