|
ஹிராக்குகை
ஆலிம் புலவர்
S. ஹூஸைன் முஹம்மது
ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ,
திண்டுக்கல்.
ஆமினாவின் மணிவயிற்றில் குடியிருந்த நாட்கள்
அதிகமில்லை! உன் வயிற்றில் தங்கியநாள் அதிகம்!
மாமயிலார் கதீஜாவின் மணிமாடம் தன்னில்
வசித்திருந்த நாளை விட உன்வாசம் அதிகம்!
ஊமையென ஒரு வார்த்தை பேசாமல் கிடந்த
உன்னிடத்தில் நபிகொண்ட உவகைதான் என்ன!
பூமிக்கு வான்செய்தி வந்திறங்கும் தளமாய்
பொன்மலையே ஹீராக்குகை நீயானதென்ன!
நிலமிருந்து புதையல்கள் வெளிப்படுவ துண்டு
நீள்மலைமேல் புதையலொன்றை அதிசயமாய் தந்தாய்
அலைகடலின் அடியில்தான் முத்துக்கள் விளையும்
ஆகாய உயரத்தில் முத்தொன்று தந்தாய்
கலைமானில் சிறிதளவு கஸ்தூரி பெறுவோம்
கல்மலையே கஸ்தூரிப் பெட்டகமாய் தந்தாய்
மலைசுமக்க முடியாத மறைகுர்ஆன் தன்னை
மாநபிகள் சுமக்கநபி யைச்சுமந்த தென்ன!
ஜிபுரயிலை நபியோடு முதன் முதலாய் கண்டாய்
இக்ரஃ எனும் குர்ஆனின் முதல்வசனம் கேட்டாய்
நபியாக நபியாக முதல் சாட்சி யானாய்
நடந்ததை நீ எதிரொலித்து ஈமானும் கொண்டாய்
அபயம் என அங்கிருந்து நபி அகன்ற போது
அசையமுடி யாததனால் அலமலர்ந்து போனாய்
தபம்வென்ற தலைவரவர் சென்றதடம் நோக்கி
தவமிருந்தாய் எப்போது காண்பேன்நான் என்று!
ஆயிரத்து நானூறு ஆண்டுகளின் மேலாய்
அடையாளச் சின்னமெனத் திகழும்ஹிரா உன்னை
தூய்மைநிற ஹாஜிகளோ வண்டுகள்போல் சுற்றி
தொட்டு உனை முத்தமிட்டுத் தூயநிலை பெறுவார்
தாய் நகராம் மக்காவில் தனிமை உனக்கேது
தரிசிக்க இரவு பகல் எப்போதும் கூட்டம்
ஓயாமல் உன் பேச்சு உலகமக்கள் நாவில்
உலகத்தின் திருப்புமனை உன்மடியில் இருந்தே!
|