| |
|
|
நபிகள்பெருமானார்!
- சௌந்தரா
கைலாசம்
பேருலகில் பிறப்பவர்கள் சிறப்புடனே வாழ,
பெருமைமிகும் திருக்குர்ஆன் போதனைகள் செய்த
சீருயரும் பண்பனைத்தும் அமைந்தவராய் மண்ணில்
திகழ்ந்திருந்த மாமனிதர் நபிகள்நா யகமாம்!
பேருயரும் திரு மறையால் நன்னெறியைப் பற்றிப்
பிறங்குகிற விதமாகப் பண்படுத்தப் பெற்று
யாருமவர் சென்றவழி பின்தொடரும் வண்ணம்
ஆளாக்கப் பெற்றவரே திருத்தூதர் அவர்கள்!
மற்றவரோ டன்பாக நன்முறையில் பழகல்,
மாறாத இனிமையது
பெருகஉரை யாடல்
குற்றமிலாத் தன்மையிலே எளிமையுடன் வாழ்தல்,
கும்பிக்குப் பசியார நல்லுணவு தருதல்
பெற்றிருக்கும் பொருளதனை வேண்டுபவர்க் கீதல்,
பிறிதொருவர்
எதிர்பட்டால் சலா மவர்க்குச் செய்தல்,
பற்றிவிட்ட
நோயாலே துன்பமுறு வோரைப்
பார்த்துவரல் எல்லாம்நற் பண்புகளென் றுரைத்தார்!
எம்மனிதன் பிழைசெயினும் மன்னித்து விடுங்கள்,
எழுப்புகிற பொல்லாத சினத்தையடக் குங்கள்,
நம் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் முற்றும்,
நல்லதென
மிகமதித்து நித்தமும் நில் லுங்கள்!
சம்மதமாய் நல்மார்க்கம் ஒப்பாத வற்றைத்
தவிருங்கள்,
தற்பெருமை,
அழுக்காறு,
சூழ்ச்சி,
செம்மையிலா
உரையாடல்,
வீண் வேலை,
அநீதி
தேவையிலை இவையெலாம்,
ஒதுக்குங்கள் என்றார்!
எதுவரினும் தாங்குகிற பொறையுற்ற மனமும்
எதிர்ப்பனைத்தும் வெல்லுகிற வீரமிகும் உணர்வும்
நிதியாக எப்போதும் நெஞ்சுக்குள் நேர்மை,
நீதியெனும்
நெறிகளினைக் கொண்டிருந்த தகவும்
வதியான களங்கமது கலவாத வாழ்வும்
வாய்த்துவிட்ட செல்வமெலாம் இறைவழியிற் செலவும்!
அதுபோக மிச்சத்தைத் தேவையுளார்க் கீயும்
அருங் குணமும் அமைந்தவர்கள் நபிகள் பெருமானார்!
|
|