முழுமதியே நாயகமே! 


மெட்டு : மௌலாய ஸல்லி வசல் லிம்தாயி மண்அபதா

 

உலகத்தின் இதயமென  உருவான மக்காவில்
அகிலத்தின் அருட்கொடையாய் அவதரித்த  நாயகமே! (2 முறை)

குறைஷிகுல திலகமென குவலயத்தில் எழுந்துதித்த
குறையிலா முழுமதியே குணக்குன்றே  நாயகமே! (2 முறை)

பூ விரியும் மக்காவில் புகழ்வான உயர்கிளையில்
வான்விரியும் கதிரவனாய் வந்துதித்த  நாயகமே! (2 முறை)

மறையோன் வாழ்த்துரைக்க மலக்குகள் புகழ்ந்துரைக்க
நிறைவான தீன்விளக்காய் நீர்வந்தீர் நாயகமே! (2 முறை)

சொல்லினிலே வாய்மை செயலினிலே தூய்மை
அல்அமீன் அல்அமீன் என்று அழைக்கப் பெற்றீர்  நாயகமே! (2 முறை)

எது வாழ்க்கை எது பயணம் என்றரியா வேளையிலே
இது வாழ்க்கை இது பயணம் என்றுரைத்த நாயகமே! (2 முறை)

மருளென்னும் இருளினிலே மயங்கி நின்ற வேளையிலே
அருளென்னும் ஒளிதந்த அருளொளியே நாயகமே! (2 முறை)

கல்லெல்லாம் கடவுளென கருதிவந்த மாக்களை
சொல்லால் மாற்றி வைத்த ஜோதி நபி நாயகமே! (2 முறை)

ஓரிறைவன் தத்துவத்தை உலகினிலே எடுத்துரைக்க
பாரினிலே வந்துதித்த பயகம்பர்  நாயகமே! (2 முறை)

தாயினிரு பாதங்களில் சொர்க்கமதை காணுங்கள்
நேயவுரை பகன்ற எங்கள் நீதியுரு நாயகமே! (2 முறை)

தன்நிலவை வெண்கதிரை தன்கையில் தந்தாலும்
ஒன்றிறை கொள்கைதனில் உறுதிகொண்ட நாயகமே! (2 முறை)

இத்தரையை உய்விக்க எழுந்துதித்த செழுங்கதிரே
முத்திரை நபியே முழுமதியே  நாயகமே!
நாயகமே! நபி நாயகமே!(2 முறை)

மௌலாய ஸல்லி வசல் லிம்தாயி மண்அபதா
அலா ஹபீபிக்க கை ரில் ஹல்கி குல்லி ஹிமி (2 முறை)

தொகுப்பு : ஹாஜி ஆரிப் (சர்செல்)

Top