மனிதனாய் பூமியில் பிறந்துவிட்டேன்... 


இயற்றியவர்: ஹுஸைன் முஹம்மத் ஆலிம் மன்பஈ, திண்டுக்கல்.

 

மனிதனாய்  பூமியில்  பிறந்து விட்டேன்... ஒரு
மகத்துவம்  இல்லாமல்  வாழ்ந்து விட்டேன்...
புனிதரை ( அஹ்மதை, முஹம்மதை )  நினைத்தே  ஏங்கி விட்டேன்...
எந்தன்  புதுப்புது  ஆசை  கூறிவிட்டேன்...

அன்னையை  இழந்து  அண்ணலார்  வாடிய
அந்தநாள் அருகே இருந்தேனா... நபி
கண்ணத்தில்  ஓடிய கண்ணீரை விரலால்
கரிசனமாகத்  துடைத்தேனா...
அல்அமீன்  என்றே  அரபிகள் போற்றி
அழைத்ததைக் காதால் கேட்டேனா... நபி
அடுத்தவர் வீட்டுக் கதவுகள் தட்டி
உதவிய காட்சியை ரசித்தேனா                    (மனிதனாய்…)

அண்ணலார்  மேய்த்த  ஆடுகளோடு
ஆடாய்  அருகே  நடந்தேனா... நபி
ஆணைக்குப்  பணிந்தே  அன்புடன்  முதுகை
வருடிட  எனை  நான்  மறந்தேனா...
ஹஜ்ருல்  அஸ்வத்  கல்லாய்  சமைந்தே
மலரிதழ்   முத்தம்  சுமந்தேனா...
ஜம்ஜம்  நீராய்  பரிசுத்த  மேனிக்குள்
அனுமதியோடு  தவழ்ந்தேனா...                   (மனிதனாய்...)

மாநபி  அழைத்ததும்  மறுகணம்  நடந்து
பணிந்த  ஓர்  மரமாய்  இருந்தேனா...
மஸ்ஜிதுந் நபவி  மிம்பரைப் போல
மனக்குறை  கூறி  அழுதேனா...
கஃபாவில்  பகைவர்  எழுதிய  ஓலையை
கரைத்த  கரையான்  ஆனேனா...
தவ்ருக் குகையில்  நபிகளைக் காத்த
சிலந்தியாக  இருந்தேனா...                           (மனிதனாய்...)

இருள்  போர்வை  போர்த்தி  நபி  உயிர்காத்த
ஹிஜ்ரத்  இரவாய்த்  திகழ்ந்தேனா...
பத்ரு  வெற்றியைப்  பரிசாய்த்  தந்த
பயன்மிகு  பகலாய்  உயர்ந்தேனா...
சத்திய  நபியின்  சான்றினைப்  பொறிக்கும்
முத்திரை  மோதிரம்  ஆனேனா...
தத்துவ  நபியின்  சரித்திரம்  உரைக்கும்
புத்தக   வரியாய் போனேனா...                     (மனிதனாய்...)

 

Top