ஸெய்யிதுனா நபி ஆதம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்


ஆதம் என்னும் சொல் அரபிச் சொல் அல்ல என்று அல்ஜவாலீக்கி கூறுகின்றார்.இது அரபிச் சொல்லான ‘உதுமா’ என்பதிலிருந்து வந்ததெனச் சிலர் கூறுகின்றனர். உதுமா என்றால் மண்ணிலிருந்து என்று பொருள்படும். அரபியில் அதமத் என்றால் பல மூலப்பொருள்கள் சேர்ந்தது என்று பொருள். எனவே நீரும், மண்ணும் சேர்ந்து ஆதம் நபி (அலை) அவர்களை உண்டு பண்ணப்பட்டதால் அவர்களுக்கு இப்பெயர் வந்தது என்று அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மண்ணினால் படைக்கப்பட்ட ஆதம் நபி (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா நாயகியை படைத்தான். எனவே மனிதவர்க்கத்தின் ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளே மனிதர் என வல்லவன்  வான்மறையில் கூறுகிறான். ஆதம் நபி (அலை) அவர்கள் 60 அடி உயரமுள்ள ஆணாக இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும், எல்லா மொழிகளையும் கற்றுக் கொடுத்தான். ஒரு நாள் இறைவன் தன்னால் படைக்கப்பட்ட தன் பிரதிநிதி ஆதம் நபி (அலை) அவர்களுக்கு அனைத்து அமரர்களும் சுஜூது செய்யும் படி கட்டளையிட்டான். அக்கட்டளைக்கிணங்க அனைவரும் சிரம்பணிந்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் எவ்வாறு மண்ணினால் படைக்கப்பட்ட ஆதமிற்கு சுஜீது செய்வது? முடியாது என மறுக்க இறைவன் வெகுண்டெழுந்து இப்லீஸை சபித்தான். இப்லீஸ் ஆதம் நபி (அலை) அவர்களின் வழித்தோன்றல்களை வழிக்கெடுக்கப் போவதாக கங்கணம் கட்டி அதன் ஆரம்பமாக அன்னை, தந்தை இருவரையும் இறைவனால் தடுக்கப்பட்டிருந்த கோதுமை கனியை உண்ணச் செய்து அவ்விருவரையும் சுகபோகமாய் வாழ்ந்த சுவனத்தை விட்டும் வெளியேறி மண்ணுலகிற்கு வருவதற்கு காரணமாய் இருந்தான். இறைவனால் வெளியேற்றப்பட்ட ஆதம் நபி (அலை) இலங்கையில் சரந்தீபின் உச்சியிலும், அன்னை ஹவ்வா நாயகி ஜித்தாவிலும் இறக்கப்பட்டார்கள்.

ஆதம் நபி சரந்தீபின் உச்சியில் இரு நூறு ஆண்டுகள் தம் பாவம் நினைத்து அழுதார்கள். இதனைப்பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறும் போது உலகத்தார்  அனைவரின் அழுகையை விட நபி தாவூத் (அலை) அவர்களின் அழுகை அதிகமென்றும,; அவர்களின் அழுகையை விட நபி நூஹ் (அலை) அவர்களின் அழுகை அதிகம் இம்முன்றையும் விட நபி ஆதம் (அலை) அவர்களின் அழுகை அதிகமென்றும் கூறினார்கள். இவ்வாறு அழுதழுது இறைஞ்சிக் கொண்டிருந்த நபி ஆதம் (அலை) அவர்களின் பாவம் பொருத்தருளி மண்ணகத்தில் கஃபா கட்டச் செய்து அதனைச்சுற்றி இறைஞ்சுமாறு இறைவன் கூறினான். பல்லாண்டு இங்ஙனம் உருண்டோடிய பின் ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா நாயகியும் அரஃபாத்தில்  ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். ஆதம் (அலை)  அவர்கள் இவ்வுலகில் 1000 ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்கள் மரணிக்கும் தருவாயில் இவர்களின் வழித்தோன்றல்கள் இவ்வுலகில் 40 ஆயிரம் பேர் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் மரணம் நிஸான் மாதம் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது  எனக் கூறப்படுகிறது. இவர்களின் உடல் அபூ குபைஸ் மலையின் அடிவாரத்திலுள்ள மகாரத்துல் குன்ஸ் என்ற குகையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் மற்றொரு வரலாறோ இவர்களின் உடல் கஃபாவிற்குள்ளும் கால்கள் கஃபாவிற்கு வெளியிலுமாக வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது என்று கூறுகிறது. இன்னொரு சொல்படி நபி நூஹ்  (அலை) அவர்களின் காலத்து வெள்ளத்திற்குப்பின் பைத்துல் முகத்திஸில் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.