|
ஸெய்யிதுனா நபி இத்ரீஸ்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
“நபியே!
நாயகமே! ஹழ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பற்றியும் இவ்வேதத்தில்
சொல்லப்பட்டதைக் கூறுவீர்களாக அவர்கள் மிக்க சத்தியவானாகவும், நம்மின்
நபியாகவும் இருந்தார்கள். அவர்களை மிக்க மேலான இடத்திற்கு நாம் உயர்த்தி
விட்டோம்;”. இவ்வாறாக இயம்புகிறது இறை மறைக்குர்ஆன்.
ஆதி தந்தை ஆதம் (அலை)அவர்களிலே பிரகாசித்த நூரே முஹம்மதிய்யா அவர்களின்
புதல்வர் நபி ஷீது (அலை) அவர்களின் நெற்றியில் பிரகாசிக்க அது அவர்களின்
வழித்தோன்றலிலே ஊடுறுவி நபி இத்ரீஸ் (அலை) அவர்களிலே இலங்கியது.
வேதங்களை
நன்கு கற்றும், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்ததின் காரணத்தால் பாடம்
கற்றுக் கொடுப்பவர் என பொருள்பட இத்ரீஸ் என பெயர் கொண்டு
அழைக்கப்பட்டார்கள்.
விக்ரகங்களை வணங்கி, அக்கிரமும், அனாச்சாரமும் புரியக்கூடிய காபில்
என்பவருடைய சந்ததியினரின் பால் அனுப்பி, கடும் எதிர்ப்புக்கும்
பேராட்டங்களுக்கும் மத்தியிலே மனம் தளராது இறைவன் நல்லுபதேசங்களை
எடுத்துரைக்கச் செய்தான்.
உலகிலேயே
முதலாவதாக பேனாவால் எழுதியதும் இவர்களே! தையல் ஆடையை முதன் முதலில்
அறிமுகப்படுத்தியதும் இவர்களே! பிலாஸபி எனும் வான ஆராய்ச்சி செய்தவரும்
இவர்களே! நிறுக்கும் தராசையும் அளக்கும் படியையும் உலகிற்கு கற்றுத்தந்த
முதல் மனிதரும் இவர்களே!.
இவர்களுக்கு வல்லவன் அல்லாஹ் 30 ஏடுகளை வழங்கினான். அம்முப்பது ஏடுகளையும்
இரவும், பகலும் ஓத இவர்களின் அதிகப்படியான வணக்கங்களை வானவர்களே கண்டு
வியப்படைகிறார்கள்.
இவர்களின் ஒரு நாள் வணக்கம், வாழும் அனைத்து மக்களின் ஒரு நாள் வணங்கும்
வணக்கத்திற்கு சமமானது.
ஒரு சமயம் அண்ணல் நபி இத்ரீஸ் (அலை)அவர்கள் இறையிடம் இறைஞ்சுகிறார்கள்.
இறைவா! நான் சுவனம் பார்க்க விரும்புகிறேன். என் விருப்பத்தை பூர்த்தி
செய்வாயாக! எனக் கூற இறைவன் இவர்களின் வேண்டுதலை ஏற்று ஆணையிடுகிறான்
அமரர்களுக்கு.
வானவர்களே! சுவனத்தின் மரக்கிளைகளில் ஒரு கிளையை எனதடியார் இத்ரீஸ் (அலை)நிற்கும்
இடத்தை நோக்கி செலுத்துங்கள் என கூற, சுவனத்து காவலர்கள் சுவன மரக்கிளையை
நபி இதரீஸ் (அலை)அவர்களை நோக்கி செலுத்த அக்கிளையை பற்றி பிடித்து சுவனம்
அடைந்தார்கள். சுவனக் காவலர்கள் சுவனத்தில் இறைவனின் அருட்கொடைகளை சுற்றிக்
காண்பித்தார்கள். நீண்ட நேரமாகியும் சுவனத்தை விட்டும் வெளியில் வராததை
கண்ணுற்ற வானவர்கள் வெளியேறும் படி கூற நபி இத்ரீஸ் (அலை)அவர்கள் வானவர்களை
பார்த்து சுவனத்தில் நுழைந்தவர்கள் அதிலிருந்து வெளியாக்கப்பட மாட்டார்கள்
என இறைவன் கூறியுள்ளான். எனவே நான்; வெளியில் வர மாட்டேன் என
கூறுகிறார்கள்.
இதனைக் கேட்ட இறைவன் வானவர்களே! என் அடியார் இத்ரீஸை சுவனத்திலேயே விட்டு
விடுங்கள். அவர் அங்கேயே எக்காலமும் இருக்கட்டும் என்றான். இறைவன்
கூற்றுப்படி அவர்களை சுவனத்திலே இருக்கவிட்டுவிட்டார்கள். சுவனத்தில்
உயர்த்தப்படும் சமயம் அவர்களின் வயது 365.
|
 |
|